தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர பலத்துடன் முன்னிலை பெற்று வரும் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் கூட்டணி வைக்காதது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தனது ஆதங்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவின் தலைவராக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, தேர்தல் முடிவுகள் குறித்துக் கூறியதாவது, தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் ஏற்கனவே இருக்கும் காயங்களில் காரம் தேய்ப்பது போல் வேதனையளிக்கின்றன.
விஜய்யுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியும் கூட விரும்பினார்கள். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் வாய்ப்பு காங்கிரஸுக்குக் கிடைத்தது; ஆனால் அதனைத் தவறவிட்டுள்ளோம்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: தவெகவுடன் கூட்டணி சேரும் காங்கிரஸ், பாமக? அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள்!

ராகுலும் விஜய்யும் இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை வென்று இன்று கள நிலவரமே வேறாக இருந்திருக்கும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் முடிவாலேயே காங்கிரஸ் மீண்டும் திமுக கூட்டணியில் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதல் முழக்கம்: விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை காங்கிரஸில் முதன்முதலில் முன்வைத்தவர் பிரவீன் சக்கரவர்த்தி தான்.
இது தொடர்பாக அவர் தனிப்பட்ட முறையில் விஜய்யைச் சந்தித்துப் பேசினார். இருப்பினும், காங்கிரஸின் உள்கட்சி பூசல் காரணமாக அவர் எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போய்விட்டன. தற்போது விஜய் முதலமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், காங்கிரஸின் இந்தத் தவறவிட்ட வாய்ப்பு அந்தக் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: மேலூரில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியது: அதிமுக வேட்பாளரை வீழ்த்தி விஸ்வநாதன் அபார வெற்றி!