கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதல் தொடங்கிய இந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களான சக்தி கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு சிலர் தொலைபேசி மூலம் பணம் கொடுப்பதாகக் கூறி பேரம் பேசியதாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பல தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி கார்த்தி மற்றும் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், இருவருக்கும் நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கரூர் போதனூர் பகுதியில் உள்ள சக்தி கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளில் காலை முதல் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.