ராஜ்யசபாவில் ஓய்வுபெறும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முக்கிய வலியுறுத்தல்களை முன்வைத்துள்ளார்.
அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல மூத்த எம்பிக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கார்கே பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்கே கூறியதாவது: "ராஜ்யசபாவின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பார்லிமெண்ட் அமர்வுகள் அதிக நாட்கள் நடைபெற வேண்டும். சட்டங்கள் இயற்றுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்."
இதையும் படிங்க: களைகட்டிய ராட்சசபா தேர்தல்... பரிசீலனை பணிகள் மும்முரம்..!! திமுக உறுப்பினர்களின் மனுக்கள் ஏற்பு..!!
மேலும், "அரசியலில் ஈடுபடுபவர்கள் பொதுவாழ்விலிருந்து ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை. தேச சேவையில் அவர்களது ஆர்வம் தளர்வதில்லை. அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு எம்பிக்கும் தங்கள் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது. ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு அவையில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

"பெரும்பாலும் நாங்கள் இத்தகைய பிரச்னைகளை எழுப்பும்போது, ஆளும் கட்சியினர் அதை விமர்சனமாக மட்டுமே கருதி, காதுகொடுத்து கேட்காமல் மறுக்கத் தொடங்குகின்றனர். மக்களின் பிரச்னைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கார்கே வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஓய்வுபெறும் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை பாராட்டி, "அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கார்கேயின் உரை, ராஜ்யசபாவின் செயல்பாடு, விவாத சுதந்திரம், எதிர்க்கட்சி பங்கேற்பு ஆகியவை குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது. கார்கே தற்போது ஓய்வுபெற்றாலும், விரைவில் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்க உள்ளார்.
இந்த உரை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்லிமெண்ட் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகள், விவாதங்களின் தரம் குறைவு ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், கார்கேயின் இந்த கோரிக்கை சரியான நேரத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விட்ருவோமா? ட்விஸ்ட்..! ராஜ்யசபா எலெக்ஷனில் போட்டியிட ராமதாஸின் தனிச்செயலாளர் விருப்பமனு..!!