தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்ட தகவலையறிந்து பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4 கோடி பணம் சிக்கியது. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, தென் மாவட்டங்களுக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு..!
இந்த வழக்கில் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடைபெறுகிறது. சிபிசிஐடி விசாரணையில், பாஜக நிர்வாகிகளான எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் தேர்தலின்போது நயினார் நாகேந்திரனுக்கு பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா மூலம் உறுதியாகியுள்ளது.

மேலும், கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷ் மூலம் ஒன்றரை கிலோ தங்கத்திற்கு பதிலாக ரூ.97.92 லட்சம் ஹவாலா பணம், தரகர் சுராஜ் மூலம் கைமாற்றப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. முஸ்தபா என்ற ரயில்வே கேண்டீன் உரிமையாளர் இந்தப் பணம் தனதென கூறியபோதும், அவருக்கு தொடர்பில்லை என சிபிசிஐடி தெரிவித்துள்ளது. கேசவ விநாயகம் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரமாகியுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி