தவெக தலைவர் விஜய் சேலம் வருகை குறித்து, அக்கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் காவல் ஆணையாளரிடம் விளக்கம் அளித்தார். விஜய் எப்படி வருகிறார் , வரக்கூடிய பாதை , மற்றும் எந்த வழியாக செல்கிறார் உள்ளிட்ட எந்த ஒரு விவரமும் கூறவில்லை என்பதால் விசாரணை.
அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், சந்தித்து வரும் மிகப்பெரிய விமர்சனமே கரூர் துயரம்தான். வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27, 2025 அன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய சரிவாக மாறியுள்ளது. இதனால் விஜய் பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என எந்த விதமான மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டாலும், காவல்துறையினர் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படிங்க: "ரூ.2 கோடி இருந்தா பேசு” - விஜய் கட்சியில் நடக்கும் மெகா வசூல் வேட்டை... தளபதியை மிஞ்சும் சின்ன தளபதிகள்...!
இந்நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 13ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும், நிர்வாகிகள் சந்திப்புக்கு கூட்டம் நடைபெற உள்ளது. சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி அருகே சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் இடத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இன்று காலை முதல் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் எப்போது வருகிறார் எந்த வாகனத்தில் வருகிறார் என்பது குறித்த எந்த விவரமும் தெரிவிக்காததால் , திடீரென சேலம் மாநகர காவல் ஆணையாளர்
அனில்குமார் கிரி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடம் , தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடம் , விஜய் எப்போது வருவார், சேலம் விமான நிலையத்திலிருந்து விஜய் அவர்களை அழைத்து வரும்போது எத்தனை வாகனங்கள் வரும் , எந்த வழியாக வரும் என்பதை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் கூறும்போது, இது நிர்வாகிகள் கூட்டம் என்பதால் , விஜய் அவர்களை சந்திக்க தொண்டர்களும் , ரசிகர்களும் பொதுமக்களும் கட்டாயம் வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலமாகவும் , தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்கலாம். தயவுசெய்து தலைவர் வரும் வழியில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் , கூட்டமாக நிற்க வேண்டாம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அதில் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட செயலாளர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் விஜய் வருவது குறித்து அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்து தெரிவிப்பார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் பணிகள் மும்முரம்..! தவெக கட்சி மாவட்டங்கள் அதிகரிப்பு... விஜய் முக்கிய அறிவிப்பு..!