மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு, கட்சி விலகல் குறித்து அவசரத்தில் எடுத்த முடிவு அல்ல எனவும் விளக்கம்
மக்கள் நீதி மய்யத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக மூகாம்பிகா ரத்தினம் உறுப்பினராக உள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மநீம கட்சியின் மாநில செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளின் இருந்தும் விலகுவதாக மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மூகாம்பிகா ரத்தினம் ஆகிய நான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகுவதை இக்கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றிய அனுபவம், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் மிக முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது. அரசியலின் அரிச்சுவடியை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசானாக தாங்கள் இருந்தீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. குறிப்பாக, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டேன்.
இதையும் படிங்க: விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!
மேலும், தங்களின் பேராதரவுடனும் நம்பிக்கையுடனும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தத் தேர்தலில் சுமார் 60,000 வாக்குகளைப் பெற்று, மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த பெருமையாகும். இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, எனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எவ்வித அவசரத்திலும் அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் எடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்த தலைவர், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் எனது பணி தொடர்ந்து நீடிக்கும்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டு, 60 ஆயிரம் வாக்குகளை பெற்றார். தற்போது ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த முடிவு உணர்ச்சி வசப்பட்டு அல்லது அவசரத்தில் எடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
மேலும் வேறு அரசியல் கட்சியில் சேர்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!