சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது, காவல் ஆய்வாளரை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 26ம் தேதி இரவு அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட போது, சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேகர் பாபு வருகை தந்தார். இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அங்கும் சேகர்பாபு வந்திருந்தார்.
பின்னர் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் ஆணையரக அலுவலகத்திற்குள் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் எங்களை உள்ளே விடுமாறு போலீசாரிடம் சேகர்பாபு வாக்குவாதம் செய்தார். எனினும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அறிவாலயத்தை அதிரவிட்ட தவெக... முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு... காரணம் என்ன?
இதனால் ஆத்திரமடைந்த சேகர்பாபு அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் ஒருமையில் பேசியதுடன், ‘நீ எல்லாம் ஒரு ஆய்வாளரா? என்ன செய்துவிட முடியும்?’ என்று மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததாக போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்குக் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அந்தச் சம்மனை ஏற்று, துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு இன்று வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும், காவலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளின் கீழான வழக்கு குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாராட்டு-னா திமுக..! பிரச்சனை-னா ஆளுங்கட்சி..! இதான் அவங்க..!! சேகர்பாபுவை வெளுத்த அமைச்சர் விஜய் பாலாஜி..!!