தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார்.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சேகர் பாபு வருகை தந்தார். இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் அங்கும் சேகர்பாபு வந்தார்.
பின்னர் மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டார். அப்போது காவல் ஆணையரக அலுவலகத்திற்குள் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் எங்களை உள்ளே விடுமாறு போலீசாரிடம் சேகர்பாபு வாக்குவாதம் செய்தார். எனினும் போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சேகர்பாபு அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் ஒருமையில் பேசியதுடன், ‘நீ எல்லாம் ஒரு ஆய்வாளரா? என்ன செய்துவிட முடியும்?’ என்று மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சேகர் பாபு, “முன் ஜாமீன் மறுக்கப்பட்ட உடன், உடனடியாக கைது நடவடிக்கையில் இறங்குகிறார்கள். மீண்டும் அலைக்கழிக்கிறார்கள். நீதிபதி அவர்கள், நீதிமன்றத்தில் காத்துக்கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொண்டு வருவது போல வந்து சுற்றி சுற்றி வந்து மீண்டும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பது இல்லை. சட்டத்தையும் மதிப்பது இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே, கடந்த 26ம் தேதி இரவு அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட போது , சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்ததாக போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அன்பில் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், மீண்டும் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வந்ததால் ஆவேசமான சேகர் பாபு மற்றும் திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திட்டமிட்டே அன்பில் மகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.