டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பாகத் தவெக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், துறை சார்ந்த அமைச்சரின் விளக்கங்களுக்கும் திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மிகக் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் மக்கள் மத்தியிலும் டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மதுபான பாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான விவகாரம் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு நடைமுறைகள் குறித்து ஆளும் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், "முந்தைய ஆட்சிக் காலத்தில் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகக் கூறி விதவிதமாகப் பாட்டெல்லாம் பாடி அரசியல் செய்தார்கள். ஆனால், இன்றைக்கு இவர்களது ஆட்சியில் வெளிப்படையாகவே பாட்டிலுக்கு 30 ரூபாய் வரை கூடுதல் வசூல் செய்யும் அளவுக்கு நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. இத்தனை பகிரங்கமான முறைகேடு அரங்கேறி வரும் நிலையில், அதற்கும் துறை சார்ந்த அமைச்சர் வெட்கமே இல்லாமல் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!
தவெக அரசின் ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும், கூடுதல் விலை வசூலைத் தடுக்கத் திராணியின்றி ஆளும் தரப்பு புதுப்புது காரணங்களைக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாகத் திமுக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!