திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடினார். திமுகவை மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், திமுகவை எதிர்த்து கடுமையான நிலைப்பாடு எடுத்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கனிமொழிக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை முதலே திமுக மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கனிமொழி இல்லத்துக்கு வந்து நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பலர் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தத் தொடரில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்த போது கனிமொழி உற்சாகத்துடன் பேசி சிரித்தபடி நன்றி தெரிவித்தார். அந்த அழைப்பு தவெக தலைவர் விஜயிடம் இருந்து வந்தது என்பது தெரியவரவே இரு கட்சியினரிடையேயும் பெரும் ஆச்சரியமும் பரபரப்பும் ஏற்பட்டது.
விஜய் தொடர்ந்து தனது பிரசாரத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று கூறி திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இந்த வாழ்த்து அழைப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா - வேலுமணி! 2வது நாளாக ஆலோசனை! தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி!!

அதேபோல தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமித்ஷாவும் கனிமொழிக்கு தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். திமுகவை எதிர்க்கட்சியாக கடுமையாக விமர்சித்து வரும் இரு தலைவர்களும் கனிமொழிக்கு வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை காலையில் மெரினா கடற்கரையில் தொடங்கினார் கனிமொழி. அங்கு முன்னாள் முதல்வர்கள் சி.என். அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். அப்போது வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார். திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கனிமொழியை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
திமுக நிர்வாகிகள் இது குறித்து கூறுகையில், விஜயும் அமித்ஷாவும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்ததில் எந்த அரசியலும் இல்லை என்றும், அது தூய்மையான நட்பின் அடிப்படையில் நடந்தது என்றும் தெரிவித்தனர். அரசியலில் எதிரிகளும் நண்பர்களும் என்று பிரித்துப் பார்க்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் கூறினர். இருப்பினும் இந்த வாழ்த்து அழைப்புகள் தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளன.
இதையும் படிங்க: மோடி பொங்கல் விழா! திருச்சியில் அமித்ஷா பங்கேற்பு!! பரிவட்டம் கட்டி உற்சாக வரவேற்பு!