ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாக அரபு நாடுகளின் வான்வெளி திடீரென மூடப்பட்டதால், ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர். இவர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் முயற்சியாக, ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) நிறுவனம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) நகரிலிருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
ஃபுஜைராவிலிருந்து டெல்லி, மும்பை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பைக்கு மட்டும் இரண்டு விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

போர்ச் சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த ஃபுஜைரா - டெல்லி மற்றும் ஃபுஜைரா - மும்பை இடையிலான வழக்கமான விமானச் சேவைகள் நாளை முதல் (மார்ச் 4) மீண்டும் சீரமைக்கப்படும் என ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் வளைகுடா நாடுகளுக்கான சுமார் 1,117 சர்வதேச விமானச் சேவைகள் இந்திய நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் உணவின்றித் தவிப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்தச் சிறப்பு விமானங்கள் அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!
ஸ்பைஸ் ஜெட் தவிர, இண்டிகோ (IndiGo) நிறுவனம் சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து 10 சிறப்பு விமானங்களை இன்று இயக்கி வருகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஓமனின் மஸ்கட்டில் இருந்து தனது சேவைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியக் குடிமக்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதே எங்களது முதல் முன்னுரிமை என ஸ்பைஸ் ஜெட் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!