தமிழக சட்டசபையில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில், சட்டசபை நடவடிக்கைகளில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், கட்சியின் நிலைப்பாடுகளை வலுவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: முதல்வர் எங்கே..? 5 வாரத்தில் 4 லாக்அப் டெத்... தமிழக அரசை கண்டித்த திமுக..!!
தவெக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அவை பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதையும் கவனிக்க வேண்டும் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், பெண்கள் திருமண உதவி, கல்விக் கடன், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் சட்டசபை உரைகளை அமைக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களையும் சட்டசபையில் விவாதிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவெக அரசின் நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்து, குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சட்டசபை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளதால், மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அதில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் குறைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லவும் திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை எதிர்கட்சியாக திமுக எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!