மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழக அரசியலை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் திமுகவும் தூக்கத்தைத் தொலைத்து, தேர்தலுக்கு முன் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு அடியையும் கணித்து எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. அதற்கு சாட்சியாக நேற்று முன்தினம் மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய “ஒரே நாள் அதிரடி ஷோ” இருந்தது.
காலை முதலே தொடங்கியது ஸ்டாலினின் “ஓட்டு வேட்டை”. முதலில் ஒரு சிறிய கட்சியின் நிறுவனர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு, தென்மாவட்ட சமுதாய ஓட்டுகளை அரவணைத்தார். கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், விஜய் ஆகியோர் பிரித்தெடுத்து வைத்திருக்கும் ஓட்டுகளை மீட்டெடுக்கும் முதல் நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
பின்னர் மேலமடை பாலத்தை திறந்து வைத்தார். 2023-ல் அடிக்கல் நாட்டிய பாலத்தை தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவை விரட்டி விரட்டி முடிக்க வைத்தார். ஆனால் அதிரடி இங்குதான் – யாரும் எதிர்பாராத வகையில் பாலத்துக்கு “வீரமங்கை வேலுநாச்சியார்” பெயர் சூட்டினார்! விஜய் தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவராக வேலுநாச்சியாரை அறிவித்ததை நேரடியாக முறியடித்து, அந்த சமூகத்தின் ஓட்டுகளை தன் பக்கம் இழுக்கும் சூப்பர் கவுண்டர் இது.
இதையும் படிங்க: விஜய்க்கு என்ன வேணும்னு கேளுங்க!! ஒன் டூ ஒன் பேசுங்க! ராகுல்காந்தி சீக்ரெட் ஆர்டர்!
கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகளையும் தேர்தலுக்கு முன் முடிக்க உத்தரவிட்டுள்ளார். ஜனவரி இறுதிக்குள் ஒரு பகுதியும், மார்ச்சுக்குள் முழு பாலமும் திறக்கப்படும். இந்தப் பாலம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே செல்வதால், அதற்கு “முத்துராமலிங்கத் தேவர்” பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முக்குலத்தோர் ஓட்டுகளை உறுதிப்படுத்தும் மற்றொரு மாஸ்டர் ஸ்ட்ரோக்!

பிற்பகலில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு பட்டா வழங்கி சாதனை படைத்தார். 67 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கினார். மதுரை மாஸ்டர் பிளான் 2044-ஐ அறிவித்தார். தென்மாவட்டங்களுக்கான முதலீட்டாளர் மாநாட்டை முதல்முறையாக மதுரையில் நடத்துவதாக அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை பாதுகாக்க முயன்று நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளான திமுக, இப்போது தென்மாவட்டத்தில் தேவர், நாடார், வேலுநாச்சியார் சமூக ஓட்டுகளை மீட்டெடுக்க பிரத்யேகமாக இறங்கியுள்ளது. விஜய்யின் வருகையால் திமுகவுக்கு ஏற்பட்ட பீதியை இந்த ஒரு நாள் மதுரை பயணமே தெளிவாகக் காட்டுகிறது.
தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டிய திட்டங்கள், பெயர் சூட்டல், பட்டா வழங்கல், மகளிர் உதவி என அனைத்தையும் ஒரே நாளில் அடித்து வைத்த ஸ்டாலின், “விஜய் வந்தாலும் திமுகதான் ராஜா” என்பதை நிரூபிக்க முனைப்புடன் இறங்கியுள்ளார். மதுரை இப்போது திமுகவின் “வோட் பேங்க் போர்க்களம்” ஆக மாறியுள்ளது!
இதையும் படிங்க: கூட்டணி கதவை அடைத்த விஜய்!! பொதுக்குழு முடிவால் தவெக நிர்வாகிகள் அப்செட்!