கடந்த அக்டோபர் 12ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்ற வளாகத்தை நோக்கி நடைபெற்ற இந்தப் பேரணியின்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஒன்இந்தியா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரிச்சா பராஷரை ராகுல் பிடித்துத் தள்ளிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது ரிச்சா பராஷர் 11 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் கர்ப்பிணியாக இருந்தார். பேரணியின்போது தன்னைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டதாகவும், அதனால் சமநிலை இழந்து விழுந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு நிம்மதி! அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு தள்ளுபடி!! சுல்தான்பூர் நீதிமன்றம் அதிரடி!
இதையடுத்து, ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும், தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இன்று அக்டோபர் 27ஆம் தேதி இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கும், இதர சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தள்ளுதல் நடந்ததாகவும், அது வெறும் கூட்ட நெரிசல் அல்ல எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணை தொடரும் நிலையில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள நோட்டீஸுக்கு ராகுல் காந்தி தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: காங்கிரஸில் அதிகார மோதல்? ராகுல்–பிரியங்கா இடையே அதிகாரப் போட்டியா? - பாஜக விமர்சனம்!