தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் (இந்திய தேர்தல் ஆணையம்), தமிழகத்தில் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தேர்தலை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. தற்போது ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே 10-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதேபோல் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் அரசுகளின் காலம் முடிவடைய உள்ளதால், இந்த ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: அசாமிற்கு பிரியங்கா காந்தி! தமிழகத்திற்கு சிங் தியோ!! காங்., வேட்பாளர் தேர்வு விறுவிறு!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அல்லது முகவரி மாற்றம் செய்ய வரும் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நேற்று வரை 12 லட்சத்து 17,913 பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பிப்ரவரி 7-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
ஆளும் திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை இணைக்க முயற்சி செய்து வருகிறது.
எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக ஆகியவை இணைந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளன. இன்னும் சில கட்சிகளை சேர்க்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனி அணி அமைக்க முயல்கிறது.
தேர்தல் ஆணையம் விரைவாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த மாதம் (பிப்ரவரி) இரண்டாம் வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அவரது தலைமையிலான குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை போலவே, இந்த முறையும் ஒரே கட்டமாக ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் போடும் கணக்கு! 2026-ல் யாருக்கு எவ்வளவு? 3 அணிகளிடம் ரகசிய பேச்சு!!