அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தால் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டத்திற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
திட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே மோதிரங்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 107 மையங்களில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு பெட்டக அறைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் இந்த பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. செப்டம்பர் 15ம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ளதால், பாதுகாப்பு பெட்டகங்களை செப்டம்பர் 5ம் தேதிக்குள் அமைக்கும் பணிகளை முடிக்க பொதுப்பணித்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!

தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தரை மற்றும் சுவருடன் உறுதியாக பொருத்தப்பட்ட எஃகு அலமாரிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், அலமாரிகளைச் சுற்றி எஃகு கம்பி வலை அமைப்பு, பூட்டக்கூடிய கதவுகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
மூன்று புறங்களிலும் கட்டட அமைப்புகளால் சூழப்பட்ட பாதுகாப்பான அறை, மூடப்பட்ட ஜன்னல்கள், சிமெண்ட் மற்றும் கான்கிரீட் மூலம் தரை மற்றும் சுவருடன் இணைக்கப்பட்ட அலமாரிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அலமாரியின் மேற்பகுதி மற்றும் இருபுறங்களும் மூடப்பட்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதுடன், முன்புறத்தில் திறக்கக்கூடிய மைல்ட் ஸ்டீல் கம்பி வலைக் கதவும் அமைக்கப்பட உள்ளது.
107 மையங்களில் இருந்து தகுதியான குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. எனினும், யார் தகுதியானவர்கள், குழந்தை பிறந்த எத்தனை நாட்களுக்குள் மோதிரம் வழங்கப்படும், பெற்றோர் என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் போன்ற நடைமுறை விவரங்கள் குறித்து அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலே இறுதியானதாக இருக்கும்.
இதையும் படிங்க: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்! ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்!