வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்! தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பு!
‘தமிழ் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்ற பெயரில் தமிழ்த் துறை சார்ந்த போட்டிகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைபிடிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். அந்த நாளில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வேட்டி, சட்டை, சேலை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும், கைத்தறித் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜயிடம் முன்வைத்த யோசனைக்கு அவர் உடனடியாக ஒப்புதல் அளித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசு அலுவலகங்களில் புதிய நடைமுறை!
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் பாரம்பரிய ஆடைகளை அணியும் நடைமுறை கொண்டுவரப்படுவது குறித்து விளக்கினார்.
முதல்வர் விஜய் வாரந்தோறும் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவதைப் பார்த்தபோது, தலைமைச் செயலகமே கல்யாண வீடு, திருவிழாக் கோலம் பூண்டதுபோல் இருப்பதாகத் தாம் அவரிடம் கூறியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சிக்கு புதிய நெருக்கடி? அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் ஆதரவு கேட்கும் தவெக தலைமை!
அதேபோல் தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அதிகாரிகள், அமைச்சர்கள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.
இந்த யோசனையைக் கேட்ட முதல்வர் விஜய், அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசித்தீர்களா என்று சிரித்தபடியே கேட்டதாகவும், பின்னர் கைத்தறித் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாட்டைச் செயல்படுத்த அனுமதி அளித்ததாகவும் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதன்படி, அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் மரபு ஆடை தினம் கடைபிடிக்கப்படும் என்றும், அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் வேட்டி, சட்டை, சேலை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ் சங்கம்!
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் விழாவில் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ் சங்கம் உருவாக்கப்படும் என்றும், அந்தச் சங்கத்தின் தலைவராக முதல்வர் விஜய் செயல்படுவார் என்றும் அவர் கூறினார். மேலும், உலகம் முழுவதும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவித்தார்.

தமிழ் தெரிந்த குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களைக் கொண்டாடும் வகையில் இந்தப் போட்டிகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என்னை சட்டசபையில் பேச வைத்தவர் முதல்வர் விஜய்!”
விழாவில் முதல்வர் விஜயைப் பாராட்டிப் பேசிய ராஜ்மோகன், பட்டிமன்றங்களில் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்த தன்னைச் சட்டமன்றத்துக்கு வருமாறு அழைத்து, சட்டசபையில் பேச வைத்தவர் முதல்வர் விஜய் என்று தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 1ஆம் தேதியைத் தமிழ்நாடு தினமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கைக்கு முதல்வர் எந்தத் தயக்கமும் இன்றி ஒப்புதல் அளித்ததாகவும் பாராட்டினார். இதற்காக அரங்கில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பதவிக்காக ரூ.5 கோடி பேரம்? அமைச்சர் சொன்ன தகவல்!
இதற்கிடையே, இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தன்னிடம் ரூ.5 கோடி தருவதாக ஒருவர் பேசியதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து விழாவில் பேசிய அவர், “இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள்; அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி தருகிறேன் என்று ஒருவர் பேசினார். இதைச் சிரித்துக்கொண்டே லயாலா மணியிடம் சொல்லி அனுப்பினேன்” என்றார்.
மேலும், “ரூ.500 கோடி கொடுத்தாலும் தகுதியும் பொருத்தமும் இல்லாத ஒருவருக்கு ஒரு பதவியைக்கூட தளபதி கொடுக்க மாட்டார். நான் தளபதியின் தம்பி என்று அவரிடம் கூறினேன். பொருத்தமான குப்புசாமி அண்ணனுக்கு ஒரு ரூபாய்கூட வாங்காமல் அந்தப் பதவியைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்தப் பதவியை வழங்குவது எங்களது கடமை” என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் மரபு ஆடை தினம், தலைமைச் செயலகத்தில் தமிழ் சங்கம், பள்ளிகளில் தமிழ்ப் போட்டிகள் எனப் பல்வேறு அறிவிப்புகளை ஒரே விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!












