தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு! சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அடுத்த கட்ட சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதிமுகவில் அதிருப்தி அணியாகச் செயல்படும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையிலான அணியிடம் தவெக தரப்பு பேச்சு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கூட்டணிக்குள் தொடரும் ஆதரவு சிக்கல்!
சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. ஆனால், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி ஆட்சித் தரப்புக்கு சவாலாக மாறியுள்ளது.
குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் ஆதரவைத் திரும்பப் பெறக்கூடும் என்ற சூழல் இருப்பதாக தவெக மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். இதற்கான மாற்று ஏற்பாடாக பாமகவின் ஆதரவைப் பெற தவெக தரப்பில் பேச்சு நடத்தப்பட்டால், அது விசிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்கவைப்பதுடன், சட்டசபையில் கூடுதல் பலத்தை உறுதி செய்ய வேண்டிய நிலை தவெகவுக்கு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: நிதித்துறை கேட்கும் காங்?! மரிய வில்சன் பதவிக்கு ஆபத்து? ராகுல்காந்தி கோரிக்கைக்கு விஜய் சொன்ன பதில்!
நவம்பர் 13-க்குப் பிறகு முக்கியத் திருப்பம்?
கடந்த மே 13ஆம் தேதி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. அந்தத் தீர்மானத்தை ஆறு மாத காலத்துக்கு மீண்டும் கொண்டுவர முடியாத நிலையில், அந்தக் கால அவகாசம் வரும் நவம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதன்பிறகு, எதிர்க்கட்சிகள் தரப்பிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சட்டசபையில் தனது பெரும்பான்மையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய சூழல் தவெக அரசுக்கு ஏற்படலாம். இதைக் கருத்தில் கொண்டே அதிமுக அதிருப்தி அணியின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சருடன் நட்சத்திர ஓட்டலில் பேச்சு!
அதிமுகவில் அதிருப்தி அணியாகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற தவெக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தவெக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, கடந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்கள் தரப்பு ஆதரவு அளித்தும், பின்னர் தங்கள் அணியில் இருந்தே ஆறு எம்.எல்.ஏ.க்களை தவெக தரப்பு இழுத்துவிட்டதாக அந்த முன்னாள் அமைச்சர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால், இந்த முறை ஆதரவு அளிப்பதற்கு முன்பாக முதல்வர் விஜய் நேரடியாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலளித்த தவெக தரப்பு, நவம்பர் மாதத்தில் அரசியல் சூழல் எந்தத் திசையில் வேண்டுமானாலும் மாறலாம் என்றும், அதற்குள் தங்களது அணியை வலுப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், முதல்வரிடம் பேசி உரிய உறுதி அளிக்கப்படும் என்றும், கடந்த முறை ஏற்பட்ட நிலைமை மீண்டும் வராது என்றும் பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் சொன்னது என்ன?
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது, “ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமான குறைகளைச் சொல்கின்றனர். எதை நம்புவது என்றே தெரியவில்லை. ஆட்சியில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். தவெக அரசு ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யுமா என்பதைப் போகப்போகப் பாருங்கள். எப்படி ஆட்சியைத் தாங்குகிறது என்பதும் தெரியும்” என்று குறிப்பிட்டார்.
நவம்பர் 13ஆம் தேதிக்குப் பிறகு சட்டசபையில் உருவாகக்கூடிய அரசியல் சூழலும், அதிமுக அதிருப்தி அணியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவும் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!