சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளம், புயல், சுனாமி போன்றவை முக்கிய பேரிடர்களாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது மலைப்பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதையடுத்து நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் பணிகளுக்காக மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலைப்பகுதிகளில் மட்டுமே நிலச்சரிவு ஏற்படும் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, எதிர்பாராத பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறியும் பணியை பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஆய்வில், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பகுதி சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டால் போக்குவரத்தும் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் சிக்கல் ஏற்படும்.
இதையும் படிங்க: கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!

நிலச்சரிவை தடுக்கும் வகையில் அதிக அபாயம் உள்ள பகுதிகளில் ‘ரீடெய்னிங் வால்’ எனப்படும் தடுப்புச் சுவர்கள் அமைத்தல், அதிக சாய்வு கொண்ட இடங்களை அடையாளம் காணுதல், அத்தகைய பகுதிகளில் கட்டுமானப் பணிகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இதற்காக கணிசமான நிதி தேவைப்படுவதால், மத்திய அரசின் நிதியை பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி சாலைகளில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவர் அமைப்பது, அதிக சாய்வு உள்ள பகுதிகளை கண்டறிவது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி கோரப்பட உள்ளது.
நாடு முழுவதும் நிலச்சரிவு அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் ரூ.750 கோடி அளவில் நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக வருவாய் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த நிதியை பயன்படுத்தி வரும் நிலையில், தமிழகத்துக்கும் உரிய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அபாயப் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமாகியுள்ளது. மத்திய நிதி கிடைக்கும் பட்சத்தில், தேர்வு செய்யப்படும் பகுதிகளில் தடுப்புச் சுவர் உள்ளிட்ட பணிகள் வேகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொள்ளை நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் பணத்தை கொட்டி வீடியோ! யூடியூபர் மதுமிதா வீடியோவால் சர்ச்சை!