ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் பிரச்சார கூட்டம் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட போலீசார் 84 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
பிரச்சார வாகனத்தைச் சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும் வாகனத்துக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் உள்ளே செல்வது மற்றும் வெளியே வருவது குறித்த வரைபடத்தைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். தள்ளுமுள்ளு ஏற்படாத வகையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்களை அனுமதிக்கக் கூடாது.
மேலும், மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும். எத்தனை மருத்துவக் குழுக்கள், எத்தனை ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும் என்பது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஈரோட்டில் மக்கள் சந்திப்பு... தவெக தலைவர் விஜய்க்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னென்ன?

சிசிடிவி கேமராக்கள், எல்இடி திரைகளின் எண்ணிக்கை விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். அவசர காலத்தில் தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்ய வேண்டும். மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்கக் கூடாது.
இது போன்ற பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளதாக பெருந்துறை பகுதி தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். திமுகவின் இளைஞர் அணி மாநாட்டுக்கு எளிதாக அனுமதி கிடைத்த நிலையில், விஜயும் அவரது தவெக கட்சியும் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவதாக தவெக தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகே கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “விஜயை பார்க்க இவர்கள் எல்லாம் வரக்கூடாது” - ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட செங்கோட்டையன்...!