தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறாளிகள், முதியவர்கள், பெண்கள், வயதானவர்களுக்கு என தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இன்று காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு, கருப்புக்கொடி ஏற்றம் போன்ற சர்ச்சைகளும் வெடித்துள்ளன.
இதனிடையே, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டி போடுகிறார்கள் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்திருந்த நிலையில், தொடர்ந்து இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் தொலைபேசியில் வாயிலாகவும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டித்தும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அர்த்தமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். தொடர்ந்து கள்ள ஓட்டு போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை எனக்கூறி திமுகவினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் பாஜக மற்றும் திமுக பூத் முகவர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், காவல் துறையினர் பலமுறை சமரசம் செய்ய முயன்றனர். சமரச பேச்சுவார்த்தை பயனில்லாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், திமுக வாக்குச்சாவடி முகவர்களை துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் சேர்ந்து திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பாஜகவினரை கண்டித்து சாலையில் அமர்ந்து திமுக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பாஜகவிற்கு எதிரான கோஷங்களையும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்களின் உரிமை மறுக்கப்படும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்..! தமிழிசை ஆதங்கம்..!
இதற்கு முன்னதாக தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்து, மறுவாக்குப்பதிவு கோரி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்திருந்தார். மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் 13-வது வாக்குச்சாவடியில் திமுகவினர் 50 கள்ள ஓட்டுகள் போட முயன்றதாக தமிழிசை குற்றம்சாட்டினார். மேலும் அதனால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!