நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடத்தப்பட்டது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக 22லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அதன்படி 5,543 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வில் 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதை அடுத்து முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியக்கூடாது, தலைமுடியில் ஜடைப்பின்னல் போடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு வந்த திருப்பூர் மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இவரை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் நீட் தேர்வின் போது மாணவர்களை உதாசீனப்படுத்தி, துன்புறுத்துவது தமிழகத்தின் அதிகாரிகள் தான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு சோதனை என்பது காப்பி அடித்து அதன் மூலம் நன்றாக படிக்கும் மாணவர்களின் சீட்டுகள் தவறான செயல்களால் பறி போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இப்படி உதாசீனப்படுத்தப்பட கூடாது.
இதையும் படிங்க: மூக்குத்தியில் எப்படி பிட்..? தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடிகள்? கொதித்த சீமான்..!

துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் யார் தவறு செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ள அதிகாரிகள், பரீட்சையை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறு செய்கிறார்கள். வேண்டுமென்றே ஒரு உயர்ந்த பரீட்சையை இப்படிப்பட்ட சில நடவடிக்கைகளின் மூலம் அதன் புனிதத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டாகிவிட்டது. அதன்பேரில்தான் வருகிறார்கள். இது போல் மாணவர்களை துன்புறுத்தும் உதாசீனப்படுத்தும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். உடனே நீட் தேர்வே குறை என சொல்ல முடியாது.

ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியது திமுகவின் தோல்வி என நான் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 5ஆவது முறையாக தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். எனவே நீட் மீது தவறில்லை. வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இங்குள்ள அதிகாரிகள் இதை செய்கிறார்கள். திருப்பூரில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என நீட் தேர்வில் யாரும் அப்படி சொல்லவில்லை. ஒரு கருத்தை சொன்னால், அதற்கு ஒரு தவறான நடைமுறையை ஏற்படுத்தி நீட் மீதே தவறான எண்ணத்தை கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு மோசடி.! வினாத்தாள் கசிவு.. ஆள்மாறாட்டம்.. இப்படிலாம் நடக்குதா பிராடுதனம்!