தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காட்டும் திடீர் ஆதரவு அரசியல் லாபத்திற்காகவே என்றும், இதில் விஜய் ஏமாந்துவிடக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் பொங்கல் பரிசுத் திட்டம் குறித்துத் தனது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்குத் தணிக்கைச் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கட்சிகளின் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை அவர் தோலுரித்துக் காட்டினார்.
"தவெக தலைவர் விஜய்க்குத் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் காட்டும் திடீர் ஆதரவு வெறும் அரசியல் லாபத்திற்காகவே; இதில் விஜய் ஏமாந்துவிடக் கூடாது" எனத் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேலும், திரைப்படங்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், சட்ட விதிகளின்படியே தணிக்கைச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகத் தெளிவுபடுத்தினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்து அவசர நிலை பிரகடனத்தை நினைவூட்டிய அவர், அப்போது கருத்துச் சுதந்திரம் எப்படிப் பாதிக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்..!! தவெகவில் ஐக்கியமான முன்னாள் ஐ.ஜி..!! யார் இந்த சந்திரன்..??
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார். "அமைச்சர் துரைமுருகனின் பேச்சை மேற்கோள் காட்டினால், இது வாக்குகளுக்காக வழங்கப்படும் பணம் என்பது தெளிவாகிறது. இந்தத் தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் (DBT) செலுத்தாமல், ரேஷன் கடைகளில் மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைப்பதும், திமுக நிர்வாகிகள் வரும்வரை மக்களைக் காக்க வைப்பதும் கண்டிக்கத்தக்கது" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். முன்னதாக, ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோருடன் இணைந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர், அங்கு நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். ஆளுநர் உறி அடித்தல் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து பொங்கல் வைத்த நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழிசை, தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவாக டூ தவெக..!! விஜய்யுடன் கைகோர்க்கும் ஜெகதீச பாண்டியன்..?? அரசியலில் புதிய ட்விஸ்ட்..!!