தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார். திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையோரம் மேடை அமைக்கப்பட்டிருந்ததால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பலரும் சீமான் பேசுவதைக் கவனித்தபடி சென்றனர்.
அப்போது, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், சீமான் பேசுவதைக் கேட்டு திடீரென வண்டியை நிறுத்தி, “அண்ணா பேசுங்கள்... பேசுங்கள்!” என்று உரக்கக் கூச்சலிட்டார். அவர் சாலையில் நின்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட காவல்துறையினரும் நாம் தமிழர் கட்சியினரும் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அந்த இளைஞர் அங்கிருந்தவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்துப் பலவந்தமாகத் தள்ளி அப்புறப்படுத்த முயன்றதால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் போலீசார் தலையிட்டு அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மேடைக்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கையில் விசிலுடன் போக்குவரத்தைச் சீர் செய்துகொண்டிருந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேலுநாச்சியார் குறித்த மேடை நாடகம் நடைபெற்றது. அதில் வேலுநாச்சியார் வேடமிட்ட பெண்ணுடன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சில பெண்கள் தமிழக வெற்றி கழகத்தின் துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு கிண்டலாகச் செல்பி எடுப்பது போல நாடகத்தை அரங்கேற்றினர். தவெக-வை நையாண்டி செய்யும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியது
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!
இதையும் படிங்க: 2026 சட்டமன்ற தேர்தல்: பிப்.21ம் தேதி முக்கிய அறிவிப்பு!! அதிரடியாக களமிறங்கிய சீமான்..!!