சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல பதவிகள் வழங்கப்படுவதை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார். கட்சியில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. லோக்சபா தொகுதி அளவில் மண்டலப் பொறுப்பாளர்களும், சட்டமன்றத் தொகுதி அளவில் மாவட்டச் செயலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றியம் உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நியமனங்களின்போது சில மாவட்டச் செயலர்கள் தங்கள் மனைவி, அம்மா, தம்பி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் சிலர் திருமாவளவனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அதிருப்தி அடைந்த திருமாவளவன், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளை அழைத்து நேரில் கண்டித்தார். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் புதிய நியமனங்களில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
வி.சி.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “மாவட்டச் செயலர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கே பல பொறுப்புகளை தர முயல்கின்றனர். இது தகுதியான பலருக்கு வாய்ப்பை பறிப்பதாக அமைகிறது” என்றனர்.
இதையும் படிங்க: இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

இதைத் தொடர்ந்து திருமாவளவன், “ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சிப் பொறுப்பு வழங்க வேண்டும். தகுதியான மற்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளையில், திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “வி.சி.க. இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு நிகராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. ‘ஒதுக்கி ஓரங்கட்டினாலும் நாங்களே மையம்’ என்பது இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், ஆகஸ்ட் 17 அன்று தனது பிறந்தநாளை ‘தமிழர் எழுச்சி நாளாக’ கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். கட்சியில் குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து, தகுதிக்கு மதிப்பளிக்கும் வகையில் நிர்வாகிகளை நியமிக்க திருமாவளவன் எடுத்துள்ள நடவடிக்கை, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சமூகநீதி வேணாம்! பெரிய துறை தாங்க! அமைச்சரவையில் வேறு துறை கேட்டு அடம் பிடிக்கும் திருமாவளவன்!