மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு அனுமதி மறுத்ததால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்ற காடேஸ்வரா சுப்ரமணியம் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... இது தான் மத நல்லிக்கணமா? நயினார் கேள்வி..!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூர்ணசந்திரன் தன்னுயிரை தியாகம் செய்தது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால்தான் என்று கூறினார். அவரது குடும்பத்தினர் தி.மு.க.வை ஆதரிப்பவர்கள் என்றும், ஆனால் இதுவரை தி.மு.க. தரப்பில் யாரும் நேரில் வந்து ஆறுதல் கூறவில்லை என்றும் விமர்சித்தார். தி.மு.க. அரசு அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கந்தூரி விழாவுக்கு அரசு அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல என்று காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார். இரு மதத்தினருக்கும் மலை மீது செல்ல அனுமதி வழங்க வேண்டும் அல்லது இருவருக்கும் மறுக்க வேண்டும் என்றார். ஒரு தரப்புக்கு மட்டும் அனுமதி அளிப்பது சரியல்ல என்று விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இது புரட்சியாக வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். அறநிலையத்துறை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு செயல்படாதது சர்ச்சையை அதிகரித்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில், மதுரை பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: வந்தாச்சு கிரீன் சிக்னல்...! திருப்பரங்குன்றம் மலைக்கு அனைவரும் செல்லலாம்... மக்கள் மகிழ்ச்சி...!