சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பிறகு, அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது அனைவரும் அறிந்ததே. அதிமுகவை ஒன்றிணைக்க கெடு விதித்ததையடுத்து, முதலில் செங்கோட்டையனை கட்சி பொறுப்பிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
அதன் பிறகு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மற்றும் ஆதரவாளர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர் பாபுவுடன் திடீர் மீட்டிங்..!! எந்த பக்கம் போகிறார் செங்கோட்டையன்..??
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் செங்கோட்டையன் நாளை விஜய் முன்னிலை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும், அங்கு அவருக்கு யாருமே எதிர்பார்க்காத மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் துக்ளக் ரமேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகம் நிச்சயமாக அந்த கட்சியினுடைய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான கருவியாக செங்கோட்டையன் இருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன். அது தவிர செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு அவருக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவம் அல்லது பொறுப்பு கௌரவம் அதை பார்த்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கக்கூடிய அதிருப்தி மனநிலையில் இருக்கக்கூடியவர்கள் சிலர் அவருடைய முடிவை பின்தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் பார்க்கிறேன். இன்றைக்கு தமிழக வெற்றிக்கழகம் என்பது திராவிட முன்னேற்ற கழகத்திற்கு போட்டியாக தேர்தல் களத்தில் இருக்கிறது. சொல்லப்போனால் பிரதான போட்டியாளராக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சமமான வலிமையோடு திகழ்கிற அரசியல் சக்தியாக இருக்கிறது. சில பகுதிகளில்அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை விட தமிழக வெற்றி கழகத்திற்கு கூடுதலான ஆதரவு இருப்பதாக எனக்கு சில கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதேபோல சமீப காலமாக விஜய், புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடைய புகழையும் பேச தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் அண்ணா திமுகவிலே இருக்கக்கூடிய தொண்டர்கள் பார்வை தவெக பக்கம் திரும்பும். மேலும் சிலர் அடுத்தடுத்த நாட்களில் இணையக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தவெக திமுகவை தீவிரமாக எதிர்க்கக்கூடிய இயக்கம், அதனால் அதில் செங்கோட்டையன் சேருவதில் தவறில்லை. அவருடைய அனுபவத்தை தவெக உரிய வகையிலே பயன்படுத்திக் கொள்வது, அந்த கட்சியினுடைய வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவி ரெடி...! அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு..!