தஞ்சையில் இன்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் நிலைப்பாட்டை முதலில் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிப்பதாக இருந்தோம். தற்போது உள்ள கால சூழ்நிலையில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் எங்களின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவித்து விடுவோம். எதுவாக இருந்தாலும் இந்த முறை அ.ம.மு.க வெற்றிக் கூட்டணியில் இருக்கும். நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான் கண்டிப்பாக வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய அரசியல் நிலவரத்தில் நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. இதை முழுமையாக தெரிந்து இதை தெரிவிக்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய கருத்து. நான் எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன். கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விட காங்கிரஸ் கணிசமான இடங்களை பிடித்துள்ளது. திருவனந்தபுரத்தில் பா.ஜ.க . வெற்றி பெற்று உள்ளது. இது அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அரசியலை கடவுள் பெயரால் மதம் ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன் தம்பி தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் RIGHT HAND டிடிவி தினகரன்... புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...!
எஸ் ஐ ஆர் தேவை இல்லை என்று கூறுவது தவறு. பீகாரில் நடந்தது குறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் பெயர்கள் நீக்கம் விடுபட்டு உள்ளவர்கள் என சரியான முறையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். சட்டமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருவது புதிது இல்லை. இது வழக்கமான ஒன்றுதான். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் தான் சேர வேண்டும் எனக் கூறி வருகிறேன் . மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டுமென்றால் அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும்.
என்னுடன் 8 ஆண்டுகள் பல பின்னடைவுகளை சந்தித்தாலும் தொண்டர்கள் பயணித்து வருகின்றனர். எனவே தேர்தல் நிலைப்பாடு கூட்டணி குறித்து தொண்டர்கள் ,நிர்வாகிகள் கருத்துதான் எனக்கு முக்கியம். செங்கோட்டையன் அரசியல் மூத்த தலைவர். அவர் த.வெ.க.வில் இணைந்துள்ளார். அதன் முடிவு குறித்து போக போக பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!