சென்னை: தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தில் நடு சாலையில் 70 வயதான விவசாயி ஒருவரை மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், "திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. தலைநகரிலும் பாதுகாப்பில்லை, கிராமத்திலும் பாதுகாப்பில்லை. பச்சிளம் குழந்தைக்கும், வயதான முதியவருக்கும் பாதுகாப்பில்லை. வீட்டிலும் சாலையிலும் பாதுகாப்பில்லை.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நல்லவர் தான்!! கூட்டணி குறித்து சூசகம்! க்ரீன் சிக்னல் கொடுத்தார் நயினார் நாகேந்திரன்!!
இத்தகைய கொடூர ஆட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி மக்களை நரக வேதனைக்கு உள்ளாக்க தயாராக இல்லை. திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன் மேலும் கூறுகையில், "சட்டம்-ஒழுங்கு என்ற வார்த்தை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா? அல்லது முழுமையாக சமாதி கட்டப்பட்டுவிட்டதா? இந்த ஆட்சியில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மக்கள் பயத்தில் வாழ்கின்றனர். இனி இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது" என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. பாஜக தரப்பில் இதை திமுக ஆட்சியின் தோல்வியாக சித்தரித்து பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் மக்கள் கோபம் மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு போன்றவை முக்கிய பிரச்சார அம்சங்களாக மாறியுள்ளன. பாஜக இதை பயன்படுத்தி திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: நெல்லை தான் என் தொகுதி!! அடித்துப் பேசும் நயினார்! அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு! பொறுத்திருந்து பாருங்கள்!