கூட்டுறவு பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல் சமயபுரத்தில் 4-வது நாளாக விவசாயிகள் காதில் பூ சுற்றி, விசில் ஊதி நூதனப் போராட்டம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று 4-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்துப் பயிர்க்கடன்களையும் தமிழக அரசு உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையாகும்.
இதையும் படிங்க: இடைத் தேர்தல் வந்தாச்சு..! களமிறங்கும் CM விஜய்... அனல் தெறிக்கும் பிரச்சாரம்..!!
இக்கோரிக்கையை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். சமயபுரம் பகுதியில் பிரம்மாண்டமான கூடாரம் அமைத்துத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்துத் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழக அரசு தொடர்ந்து மறுத்துவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்....
அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் வகையில், விவசாயிகள் தங்கள் காதில் பூ சுற்றிக்கொண்டும், கைகளில் விசில் ஊதியும் நூதன முறையில் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என்றும் போராட்ட களத்தில் உள்ள விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உறுதியுடன் வலியுறுத்தியுள்ளனர்....
இதையும் படிங்க: லண்டன் முதலீடுகள்.. புதிய திட்டங்கள்..! எகிறும் எதிர்பார்ப்பு...! உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை..!