இந்திய விடுதலைக்காக வெள்ளையனை எதிர்த்து சமரசமின்றிப் போராடிய முன்னணி சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களின் சமூக விடிவிற்காக வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த பெருந்தலைவருமான திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் தியாகத்தைப் போற்றி நினைவுகூர்வது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையாய கடமையாகும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கோழியாளம் கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசனின் 81-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது பிறந்த ஊரான கோழியாளத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கமும் நினைவாஞ்சலியும் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்காகவும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் வெள்ளையனை எதிர்த்துக் களமிறங்கிய முன்னணி சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் மிக முக்கியமானவர்.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!
லண்டனில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டமேசை மாநாட்டில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து பங்கேற்று, ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்திற்குத் தனித் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், அரசுப் பணிகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் முகத்திற்கு நேராக உரிமைக்குரல் எழுப்பியவர்.
தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும், அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காகவும் அயராது பாடுபட்ட அத்தகைய மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகியின் 81-வது நினைவு தினத்தில் அவரை நெஞ்சார நினைவு கூர்வதை அதிமுக தனது வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறது என்று புகழாரம் சூட்டினார்.
இதனிடையே, எதிர்வரும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மாபெரும் சுதந்திரப் போராட்ட தியாகியின் நினைவைப் போற்றி அனுசரிக்கின்ற இந்த புனிதமான இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று நாசூக்காகத் தவிர்த்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கார் தாக்கப்பட்ட விவகாரம்! பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 9 பேர் மீது வழக்கு!