மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மந்தை திடல் பகுதியில், சோழவந்தான் தனித் தொகுதி திமுக வேட்பாளர் திரு. வெங்கடேசன் அவர்களை ஆதரித்து, திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா அவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திருச்சி சிவா அவர்கள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: எல்லோரும் ஓர் நிலை" என்ற வாழ்வுக்கு மாறாக, இந்த நாட்டில் ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கல்வி முறைதான் இருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. அவர்கள் நுழைகின்ற எந்த மாநிலமும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் செயல்பாடுகளால் நாட்டுக்கு நன்மையில்லை. இந்தியாவிலேயே சிறந்த முதன்மைத் தலைவராகத் திகழ்பவர் நம்முடைய முதல்வர் தளபதி அவர்கள்.
தமிழகத்தில்தான் முதன்முதலாக கலைஞர் ஆட்சிக் காலத்தில் மகளிர் காவல்துறை உருவாக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அதைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தள்ளிப்போடுவது முறையல்ல.
இதையும் படிங்க: பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!
சிவபெருமானைத் 'தாயுமானவர்' என்று சொல்வார்கள். ஒரு தாய் தன் குழந்தையின் பசியையும் துயரத்தையும் உணர்வது போல, மக்களின் தேவையை உணர்ந்த அரசு இது. அதனால்தான் 70 வயதானவர்களுக்கு வீட்டிற்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்திற்கு "தாயுமானவன்" என்று முதல்வர் பெயர் சூட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை இருந்தது. ஆனால், அம்பேத்கரும் நேருவும் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கும் வாக்குரிமையை வழங்கினார்கள். தேர்தலில் ஏழையின் வீட்டு வாசலில் ஓட்டு கேட்கத் தலைவர்கள் வரவேண்டிய நிலை இருப்பதால்தான் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது. வாக்குச்சாவடி ஒன்றுதான் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமமாக நிற்கும் இடமாகும்.
நான் பிறந்த மூன்றாவது மாதமே என் தந்தையை இழந்தவன். 29 வயதில் விதவையான என் தாயார், பெரியார் வழியில் நின்று என்னை வளர்த்தார். அந்த விதவைத் தாய் வளர்த்த பிள்ளைதான் இன்று 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐநா சபை பிரதிநிதியாகவும் உங்கள் முன்னால் நிற்கிறேன். 'எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேசாதே, யாரிடமும் கையேந்தாதே' என்பது என் தாயின் கட்டளை. அந்தச் சொல்லை மீறி இன்று வாடிப்பட்டியில் உங்களிடம் கையேந்தி நிற்கிறேன் என்றால், அது எனக்காக அல்ல; வேட்பாளர் வெங்கடேசனுக்காகவும், தமிழகத்தின் விடியலுக்காகவும் தான்.
காவலன் விழித்திருந்தால் தான் கள்வனுக்குப் பயம் இருக்கும். கடந்த கால அதிமுக ஆட்சியையும், தற்போதைய திமுக ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் வளமாக அமைய, சோழவந்தான் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்" என அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: சென்னைக்கான ஸ்பெஷல் வாக்குறுதிகள்..! திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!!