அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரையில் நடந்த செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்டத் தயாராகிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்தார். மேலும், பாஜகவில் இருந்து யாரும் தங்களை மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு கட்சியில் சேர்ந்தது குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "அண்ணன் செங்கோட்டையன் 72 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியின் பொறுப்பில் இருக்கிறார். அவர் அதிமுகவின் மூத்தவர். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததுடன், 50 ஆண்டு வரலாறு உள்ளவரை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு அவர் வேறு கட்சியில் சேர்ந்திருக்கிறார். இத்தனை நாள் யோசித்து அந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பழனிசாமிக்குப் பாடம் புகட்டச் செங்கோட்டையன் தயாராகிவிட்டார்" என்று விமர்சித்தார்.

மேலும், தலைவர்கள் மீதான படத்தை வைத்திருப்பதும், நினைவிடத்தில் செல்வதும் செங்கோட்டையனின் உண்மையான மனநிலையைக் காட்டுவதாகவும் தினகரன் குறிப்பிட்டார். "பழனிசாமி துரோகமும் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசத் தெரியாதவர்" என்று கடுமையாக விமர்சித்த தினகரன், அதிமுகவில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!
அம்மா (ஜெயலலிதா) அவர்களால் வெற்றி பெறச் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள், பிப்ரவரி 2017-ல் திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். ஆனால், அவர்களுக்குப் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், அவரை மாற்ற வேண்டும் எனக் கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்தனர். ஆட்சி கவிழ்க வேண்டும் என அவர்கள் மனு கொடுக்கவில்லை.
அண்ணன் கே.பி.முனுசாமி எனக்குப் பதில் சொல்வது தவறாக உள்ளது. அன்று சட்டமன்றத்தில் திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். அண்ணன் முனுசாமிக்கு எல்லாம் தெரியும், இருந்தாலும் அன்று பன்னீர்செல்வம் தர்மயுத்தத்திற்கு ஆதரவாக இருந்தவர் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறார்.
நட்பு ரீதியாக பாஜகவில் இருந்து சிலர் பேசுகிறார்கள். ஆனால், மீண்டும் NDA கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை" என்று கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் மழைக்காலத்தில் நீர் தேங்குவது குறித்துப் பேசிய அவர், திமுக கட்சிக்கு ஆதரவாக இதைச் சொல்லவில்லை. அவர்கள் சரியாகத்தான் நடவடிக்கை எடுத்து எவ்வளவு விரைவாக நீரை வெளியேற்ற முடியுமோ அந்த அளவுக்குப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அம்மா காலத்தில் இருந்தே சரி செய்யப்பட்டு வருகிறது, இவர்களும் சரி செய்து பணிகளை முடிந்த அளவு சரியாகத்தான் செய்கிறார்கள் என்று ஆளுங்கட்சிக்குச் சாதகமாகப் பேசினார்.
இதையும் படிங்க: இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடரும் கனமழை!