சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் கொள்கைகளையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த செய்தித் தொடர்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது. துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணியில், அனுபவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவெகவின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணியை நிர்வகிக்கப் புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த அணியின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராகக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் A.ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர்களாகச் செங்கல்பட்டைச் சேர்ந்த S.ரமேஷ் மற்றும் நெல்லையைச் சேர்ந்த J.கேத்ரின் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் குரலைத் தேசிய அளவில் ஒலிக்கச் செய்ய, G.பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் M.சத்தியகுமார் மற்றும் மதுரை M.K.தேன்மொழி பிரசன்னா ஆகியோர் தேசியச் செய்தித் தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அளவில் கட்சியின் கருத்துகளை முன்வைக்க முகில் வீரப்பன், அமலன் சாம்ராஜ் பிரபாகர் உள்ளிட்ட 6 மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். “புதிய நிர்வாகிகள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இணைந்து செயல்படுவார்கள்” எனத் தலைவர் விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கழகத் தோழர்கள் இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் கட்சியின் பிம்பத்தை வலுவாகப் பதியச் செய்யவே இந்த ‘மீடியா டீம்’ களமிறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "கதவுகள் திறந்தே இருக்கு.. ஆனா கண்டிஷன் இதுதான்"! விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - செங்கோட்டையன்
புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட விஜய், அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஏற்கனவே மாவட்ட வாரியான கட்டமைப்புகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது செய்தித் தொடர்பு அணிக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆயத்தப் பணிகள் இருப்பதைக் காட்டுகிறது. குறிப்பாக, பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் சத்தியகுமார் போன்றவர்களின் நியமனம், விவாத மேடைகளில் கட்சியின் நிலைப்பாட்டைத் தர்க்கரீதியாக முன்வைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டின் தொடக்கமாக வெளியான இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நீக்கினா தவெக-தான்!" - இபிஎஸ்-ஸை கடுப்பேற்றிய மாஜி எம்.எல்.ஏ! செங்கோட்டையன் ஆசியுடன் விஜய் கட்சிக்கு தாவல்?