தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது முதல் பிரச்சார கூட்டத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து தனது பிரத்யேக பிரச்சார வாகனம் மூலம் மரக்கடைக்கு பயணத்தை தொடங்கினார்.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்த தொண்டர்கள் விஜய்யைக் காண ஆர்வம் காட்டியதால், வெறும் 20 நிமிடத்திற்குள் மரக்கடைக்கு வந்து சேர வேண்டிய விஜய் வாகனம், ஆமை வேகத்தில் ஊர்ந்து 4 மணி நேரம் பயணித்தது. காலை 10.30 மணிக்கு மரக்கடையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய விஜய், ஒருவழியாக மாலை 3 மணிக்கு வந்தடைந்தார்.
மரக்கடை அரசு பள்ளி அருகே தனது பிரச்சார வாகனம் மீது ஏறி நின்று விஜய் பேசத்தொடங்கினார். திருச்சியில் இருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கியது ஏன் என்பது குறித்து விஜய் பேசியது மட்டுமே, மக்களைச் சென்றடைந்தது. விஜய் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே தொழில்நுட்ப கோளாறு காரனமாக மைக், ஸ்பீக்கர் என இரண்டும் சரியாக வேலை செய்யவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மைக் சரி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்க காரணம் என்பதை விளக்கிய விஜய், தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்த போல், திமுகவை டாரு டாராக கிழிக்க ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: “கேட்கல... சத்தமா...” விஜய் பேச்சைக் கேட்க முடியாமல் கதறிய தொண்டர்கள்... கடகடவென கலைந்த கூட்டம்...!
அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தல்ல திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துச்சி. அதுல எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க? டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?
நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?. திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி ஓசி’ எனச் சொல்லிக்காட்டுகிறார்கள். அனைத்து மகளிருக்கும் ₹1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
ஆனால், கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை த.வெ.க செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம் எனக்கூறி தனது உரையை நிறைவு செய்துகொண்டார்.
இதையும் படிங்க: தமிழகமே எதிர்பார்த்த தருணம்; திருச்சியில் சுற்று பயணத்தை தொடங்கியது குறித்து விஜய் விளக்கம்...!