திருச்சி கிழக்கு உட்பட ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதில், கூட்டணி கட்சிகளுக்கு 15 சதவீத இடங்களை ஒதுக்கிவிட்டு, 85 சதவீதம் இடங்களில் போட்டியிடவும் வியூகம் வகுத்துள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை, அடுத்து நடைபெற உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் தக்கவைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் வெற்றிதான், கிராமப்புறம் வரை உள்ள பெண்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் தவெகவுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்.
இதையும் படிங்க: ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!
எனவே, மொத்தம் உள்ள உள்ளாட்சிப் பதவிகளில் 85 சதவீதம் வரை தவெகவே களமிறங்க கட்சித் தலைமை விரும்புகிறது. மீதமுள்ள 15 சதவீதம் இடங்களை மட்டும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக இடங்கள் மற்றும் மேயர் பதவி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கின்றன. எனினும், அந்தக் கட்சிகளுடன் தவெக அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பேச்சு நடத்தி, 15 சதவீதத்துக்கு ஒப்புக் கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகிகள் கூறியதாவது: வலுவான கட்டமைப்பு கொண்ட திமுக, அதிமுகவை எதிர்கொள்ளும் வகையில் தவெக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்களே உள்ளாட்சித் தேர்தல் பணிக்குப் பொறுப்பேற்க உள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளில் கிடைக்கும் பதவிகள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம். எனவே, வெற்றி வாய்ப்புள்ள இடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தவெகவுக்காக உழைத்தவர்கள், உள்ளூர் அளவில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சட்டசபைத் தேர்தலைப் போல் முதல்வர் விஜயின் செல்வாக்கை மட்டும் நம்பி உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளைப் பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் தான் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தவெகவுக்கு மிரட்டல்..! திமுக கவுன்சிலர் சரவணன் மீது வழக்குப்பதிவு.! தேடுதல் வேட்டை..!!