இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (வயது 100) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மூச்சுத் திணறல் பிரச்னைகளால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அங்கு காபி அருந்தும்போது ஏற்பட்ட ஆஸ்பிரேஷன் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டது. மூச்சுத் திணறல் அதிகரித்ததால், நேற்றிரவு அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: இல்லங்கள் தோறும் அமைதி, வளம் பெருக.. கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூத்த மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு, தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் பூரண நலம் பெறுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராகவும், சமூக நீதிக்காகவும், உழைப்பாளர் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவரது உடல்நிலை மேம்பட வேண்டி அவரது கட்சித் தோழர்களும், ஆதரவாளர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நல்லகண்ணுவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார். விஜய், தொலைபேசி மூலம் நல்லகண்ணுவின் குடும்பத்தினருடன் பேசி, அவரது உடல்நல முன்னேற்றத்தை விசாரித்ததாகவும், விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்ததாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நல்லகண்ணு அவர்களின் உடல்நலம் குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவருக்கு விரைவில் முழு உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்,” எனப் பதிவிட்டார். இந்தச் செயல், அரசியல் தலைவர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

தவெக தலைவராக அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வரும் விஜய், மக்கள் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தி வருவதுடன், மூத்த தலைவர்களை மதிக்கும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவரது அரசியல் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தொடர்ந்து 11வது நாளாக போராட்டம்.. தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்தார் தவெக தலைவர் விஜய்..!!