சிவகங்கை நகராட்சியில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. 21-வது வார்டு திமுக கவுன்சிலரான ஆயுப் கான், தனது பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார். வழக்கமாக காலையில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்கள் வீதி வீதியாக செல்லும்போது விசில் ஊதி மக்களுக்கு தங்கள் வருகையை தெரியப்படுத்துவது ஒரு பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அந்த விசில் சத்தம் கேட்டதும் வீட்டில் உள்ளவர்கள் குப்பையை வெளியே கொண்டு வந்து கொடுப்பார்கள்.
ஆனால் இந்த கவுன்சிலர் திடீரென்று அதற்கு தடை விதித்துவிட்டார். தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதியபடி வந்தபோது, கவுன்சிலர் அவர்களை அழைத்து "இனி என் வார்டில் விசில் ஊதக்கூடாது" என்று சொல்லி, அவர்கள் கையில் இருந்த விசிலை பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக ஒரு சிறிய கை ஒலிபெருக்கி வாங்கிக் கொடுத்து, அதை வைத்து "குப்பை கொண்டு வாருங்கள்" என்று அறிவிக்கச் சொல்லியிருக்கிறார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பின்னால் உள்ள காரணம் தான் மக்களை இன்னும் அதிகம் கலாய்க்க வைத்திருக்கிறது.

தற்போது தேர்தல் ஆணையம் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. தவெகவின் சின்னம் விசில் என்பதால், அந்த சின்னத்தை நினைவூட்டும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் விசில் ஊதுவது தனக்கு பிடிக்கவில்லை என்று கவுன்சிலர் நினைத்திருக்கலாம் என்று பலரும் ஊகிக்கின்றனர். இந்த விவகாரம் வெளியானதும் நெட்டிசன்கள் வேகமாக கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். "இனி வீட்டில் குக்கர் விசில் அடிக்கக்கூடாது என்று உத்தரவு போடுவாரோ" என்று கேலி செய்கிறார்கள். "குக்கர்ல விசில் இருக்கே, அதை ஊதினா என்ன ஆகும்?" என்று கிண்டல் அடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்… வேட்பாளர் நேர்காணல் பணிகள் தீவிரம்… விஜய் முக்கிய ஆலோசனை..!
சிலர் "தூய்மை பணியாளர்களுக்கு விசில் தடை, ஆனால் வீட்டில் குக்கர் விசில் ஊதலாமா?" என்று கேட்டு மீம்ஸ் போடுகிறார்கள். "விரைவில் எல்லா வீடுகளிலும் குக்கர் விசில் அடிக்கக்கூடாது என்று சட்டம் வரும்" என்று கிண்டல் செய்கிறார்கள். இப்படி ஒரு சாதாரண விசில் விவகாரம் இப்போது பெரிய அளவில் காமெடியாக மாறியிருக்கிறது.இந்த சம்பவம் தூய்மைப் பணியாளர்களின் அன்றாட வேலையை எப்படி பாதிக்கும் என்பதை விட, அரசியல் கட்சிகளுக்கு இடையே உள்ள போட்டி எந்த அளவுக்கு சின்ன விஷயங்களிலும் தெரியும் என்பதை காட்டுகிறது. ஒரு பக்கம் தூய்மை பணியாளர்களின் வசதியும் மக்களின் அன்றாட வாழ்க்கையும், மறுபக்கம் அரசியல் சின்னங்களின் மீதான உணர்வும் மோதிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!