சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகம் வரும் காலத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் இயக்கமாக உருவெடுக்கும் என்று தெரிவித்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டம் வெறும் தேர்தல் கால கண்துடைப்பு மட்டுமே என்று விமர்சித்த அவர், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட டிரெய்லர் மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், வரும் பொங்கல் பண்டிகைக்குள் தவெக-வில் இணையப்போகும் முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்துப் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி, தமிழக அரசியலில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சொல்வது போல் அல்லாமல், விஜய் வரும் தேர்தலில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறார்” என்றார். உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்திலும், பிரதமர் இரண்டாம் இடத்திலும், உதயநிதி ஸ்டாலின் நான்காம் இடத்திலும் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அடுத்த முதல்வர் விஜய்தான் என்பதைக் காலம் பதில் சொல்லும் எனப் பெருமிதத்துடன் கூறினார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வேண்டாம், ஒரு புதிய முகம் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாகத் தெரிவித்த அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்குப் பிறகு அந்த வெற்றிடத்தை விஜய் நிரப்புவார் என்றார். காங்கிரஸ் எம்பி சிதம்பரம் தவெக-வை ஒரு ரசிகர் மன்றம் என்று விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, மக்கள் ஆர்ப்பரிப்பதே சாட்சி” எனப் பதிலளித்தார். மேலும், டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தவெக கூட்டணியில் இடம்பெறுவார்கள் என்பதைச் சூசகமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியை சமாளிக்க.. தவெக வேட்பாளர்களுக்கு விஜய் வழங்கும் விட்டமின் "M"..!!
மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா ஒரு வரலாற்றைப் படைத்துள்ளதாகவும், அங்குப் பிரதமருக்குக் கூட நடக்காத வகையில் இரண்டு மணி நேரப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு மக்கள் திரண்டதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்துக் கேட்டபோது, “அதன் அரசாணையை முழுமையாகப் பார்க்க வேண்டும்; இது முழுக்க முழுக்க ஒரு தேர்தல் கால அறிவிப்பு மட்டுமே” என்றார். “ஜனநாயகன் டிரெய்லரே ஒரு பெரிய மாற்றத்தைத் தொடங்கிவிட்டது, படம் வெளியான பிறகு மக்கள் வியந்து போவார்கள்” என்று கூறி, பொங்கலுக்குள் பல முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: ஆட்டம் ஆரம்பம்! தவெக-வின் புதிய செய்தித் தொடர்பு நிர்வாகிகள் யார்? விஜய் வெளியிட்ட முக்கியப் பட்டியல்!