எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப் பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனிப் பத்தியே போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அவரு மட்டும் எப்படி ஜெயிச்சாராம்? தவெக விஜய் உடன் தன்னை ஒப்பிடும் உதயநிதி?! ஸ்டாலினிடம் பறக்குது புகார்!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தவெக வினரும் தங்களது கிரைம் கோட்டாவை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்குச் சாட்சியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர் கணவனையே கொலை செய்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் டிராக்டர் ஓட்டி, டீ குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தியிருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன் என்றும், டம்மி முதலமைச்சரின் ஆசியோடுதான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்துகள் சமூக ஊடகங்களிலும் விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன.
இதையும் படிங்க: சன்ன ரகப் பொன்னி டெண்டர் விட்டதே தெரியலையே? ரேஷன் அரிசி பாலிஷ் செய்து விற்பனையா? உதயநிதி கேள்வி!