சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய் அவர்களின் 'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) சான்றிதழ் வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் விஜய் இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் விஜயை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
இதையும் படிங்க: #BREAKING: ஜன நாயகனுக்கு U/A... உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஆணை… அதிரடி தீர்ப்பு வழங்கிய ஹைகோர்ட்..!
"கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்க மாட்டார். இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்க மாட்டார். கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், 'ஏ திமுக அரசே!' என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், 'ஏ பாஜக அரசே!' என்று பொங்க மாட்டார்.
எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள். பொங்கலோ பொங்கல்!"
கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.
இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.
காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர்…
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) January 9, 2026
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பல சமய விழாக்களில் பங்கேற்று மக்களிடையே நல்லுறவை வலியுறுத்துவார் என்று கூறப்படும் நிலையில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அல்லது மத்திய அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் போதுமான அளவு குரல் கொடுக்கவில்லை என்று ஆளூர் ஷாநவாஸ் சாடியுள்ளார்.
குறிப்பாக, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் திமுக அரசை விமர்சிக்கும் விஜய், மத்தியில் ஆளும் பாஜக அரசின் சென்சார் போர்டு நடவடிக்கைக்கு எதிராக ஏன் பேசவில்லை என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இந்த விமர்சனம் தவெக ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், சிறுபான்மை உரிமைகளை வலியுறுத்தும் தரப்பினரிடையே ஆதரவையும் பெற்றுள்ளது.
விஜய் தரப்பில் இதுவரை இந்த விமர்சனத்துக்கு எந்த பதிலும் வெளியிடப்படவில்லை. 'ஜன நாயகன்' பட சான்றிதழ் விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விமர்சனம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உங்க மக்கள் பணி தொடரனும்... செங்கோட்டையனுக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து...!