சென்னை: தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க., தனிப்பெரும்பான்மை பெறாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததாக கூறப்படுகிறது. முதல்வர் விஜயுடன் சேர்த்து அமைச்சரவையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 4 பேரும் அமைச்சர்களாக உள்ளனர்.
ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்த நிலையில், ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள் தங்களது துறையில் மேற்கொண்ட பணிகள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள், தொகுதி சார்ந்த பணிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான அணுகுமுறை உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?
இதுதொடர்பாக முதல்வர் விஜயின் ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைமைச் செயலக வட்டார தகவலின்படி, சில அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அமைச்சர்கள் தங்களது வெற்றிக்காக உழைத்த சொந்த கட்சி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற புகார்களும் முதல்வரின் கவனத்துக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் இலாகா மாற்றப்படலாம் என்றும், த.வெ.க.வைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பெரிய இலாகா வேண்டாம் என விருப்பம் தெரிவித்த ஒரு அமைச்சரின் துறையும் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் கட்சி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, யார் நீக்கப்படுவார்கள் அல்லது யாருக்கு இலாகா மாற்றம் செய்யப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.
இதையும் படிங்க: Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!