சென்னை: சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று பரபரப்பான விவாதம் நடைபெற்றது. தவெகவை சேர்ந்தவர்களும் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபடுவதாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா சுட்டிக்காட்டிய நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார்.
சட்டசபையில் பேசிய பிரேமலதா, சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து மிகவும் கொச்சையான மற்றும் தவறான பதிவுகள் வெளியிடப்படுவதாக தெரிவித்தார். இதில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிலரும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், முதல்வர் விஜய் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். பெண்கள் குறித்து அவதூறாக பேசும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தவெகவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் தவெகவை குறிவைத்து போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். தனது பெயரிலும், மற்ற அரசியல் பிரமுகர்களின் பெயரிலும் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கொண்டதாக கூறப்படும் சமூக ஊடகப் பிரச்சினைகளைப் போன்றே தற்போது தவெகவும் எதிர்கொள்வதாக நிர்மல்குமார் கூறினார். இதுபோன்ற போலி கணக்குகள் மற்றும் அவதூறு பதிவுகளை கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கும் பணியில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதேவேளை, தவெகவை சேர்ந்தவர்கள் யாராவது பெண்கள் குறித்து அவதூறான பதிவுகளை வெளியிட்டாலும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதியளித்தார்.
இதனால் பெண்களை குறிவைக்கும் சமூக ஊடக பதிவுகள் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!