சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை நடத்தினார். தமிழகத்தின் 234 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், “இது வெறும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் அல்ல... இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
எம்.எல்.ஏ. என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிய விஜய், “அனுபவத்தை வைத்துக்கொண்டு கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது. அனுபவத்தை வைத்துக்கொண்டு நிருபர்களை அடிக்கும் எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடாது. கனிமவளங்களை கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது” என்றார்.
இதையும் படிங்க: இளைஞர்களுக்கான தவெகவின் வாக்குறுதிகள்! உறுதிமொழி அல்ல உத்தரவாதம்!! விஜய் ஃப்யர் பேச்சு!
மேலும், “எல்லா இடத்திலும் நானே நிற்க முடியாது என்பதால், என் சார்பில் மக்களுக்காகப் பாடுபடும் வேட்பாளர்களை கவனமாகத் தேர்வு செய்துள்ளேன். ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன். அவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் பொறுப்பு” என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்த விஜய், “உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போல, கிழிந்த துணியை தைத்தது போல... ஒட்டுப்போட்ட கூட்டணிதான் ஸ்டாலின் சார் கூட்டணி” என்று கூறினார். “இது ஊழலில் ஊறிப்போனவர்களுக்கும், ஊழலுக்கு எதிரானவர்களுக்கும் இடையிலான தேர்தல்” என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, மக்கள் பணத்தை சுரண்டாமல் இருப்பது உள்ளிட்ட விஷயங்களில் தனது உறுதியை வெளிப்படுத்திய விஜய், “மக்கள் பணத்தை எடுக்க மாட்டேன். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன். போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். ஊழல் கறை படியவிட மாட்டேன்” என்றார்.
வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய், “இன்று வேட்பாளர்கள் கொடுத்தது வெறும் உறுதிமொழி அல்ல... இது உத்தரவாதம்” என்று வலியுறுத்தினார். தேர்தல் குறித்து பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் மட்டும்தான் போட்டி” என்று தெளிவுபடுத்தினார்.
இதன் பிறகு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். எதிர்பார்ப்புக்கு ஏற்ப, விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். த.வெ.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை ஒரே நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். விஜயும் பெரம்பூர் தொகுதியில் நாளை மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி த.வெ.க.வின் தேர்தல் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. விஜய்யின் உரை மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: Breaking! பெரம்பூர், திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் போட்டி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!