தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் தவெகவுக்கு பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளன. கட்சித் தலைவர் நடிகர் விஜய் எங்கு சென்றாலும் முன்னணி நிர்வாகிகளை தன்னுடன் அழைத்துச் செல்வதால், அவர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரம் செய்தார். தற்போது புதுச்சேரியில் பிரசாரம் செய்து வரும் அவர், அடுத்து சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் முன்னணி நிர்வாகிகள் கட்டாயம் தன்னுடன் வர வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர். தி.நகர் தொகுதியில் போட்டியிடும் பொதுச்செயலர் ஆனந்த் புதியவர் என்பதால் அங்கு தீவிர பிரசாரம் தேவை. அதேபோல் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார் ஆகியோர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: அடிக்கடி ஆப்சண்ட் ஆகும் விஜய்!! பிசுபிசுக்கும் தவெக பிரசாரம்!! நிர்வாகிகள் கலக்கம்!

கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க. தீவிர பிரசாரம் செய்வதால் அங்கும் உள்ளூர் பணிகள் முக்கியம். ஆனால் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி பெறுவது முதல் பிரசாரம் செய்வது வரை முன்னணி நிர்வாகிகள் தன்னுடன் இருக்க வேண்டும் என அவர் கட்டளையிடுகிறார்.
விஜய், தன்னுடன் நிர்வாகிகள் இருந்தால்தான் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்றும் பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறுகிறார். இதனால் நிர்வாகிகள் தர்மசங்கடத்தில் இருந்து அவருடன் சென்று வருகின்றனர். இந்தப் பிரச்னை முன்னணி நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, பல வேட்பாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலான தவெக வேட்பாளர்களுக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. விஜய் முகத்தை வைத்துத்தான் ஓட்டு பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. “நான் வேறு இல்லை, வேட்பாளர்கள் வேறு இல்லை” என விஜய் அடிக்கடி கூறினாலும், கொளத்தூரில் அவர் ஒரு வேட்பாளரின் பெயரை தவறாகச் சொன்னார். திருச்சி கிழக்கில் பிரசாரம் செய்தபோது மற்ற தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை கூட உச்சரிக்கவில்லை.
மேலும் 106 வேட்பாளர்கள் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் தவெகவினர் அவர்களுக்கு தேர்தல் பணிகளை செய்ய மறுக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்த கட்சி உயர்மட்டத்தில் போதிய ஆள் இல்லை. விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பல மாவட்டங்களுக்கு அவர் செல்வதே கேள்விக்குறியாக உள்ளது. விஜய் பிரசாரம் செய்ய வராவிட்டால் தாங்கள் ‘அவுட்’ ஆகிவிடுவோம் என பல வேட்பாளர்கள் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: மும்பையில் த்ரிஷாவிடம் அமித்ஷா தரப்பு பேச்சுவார்த்தை?! அதிமுக -பாஜகவில் இணைகிறதா தவெக?