தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முழு வீச்சில் தயாராகி வருகிறது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் விரைவில் அடுத்தக்கட்ட பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளார்.
தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் த.வெ.க.வுக்கு ஒதுக்கீடு செய்து அனுப்பிய தேர்தல் சின்னத்தை பிரமாண்டமான வகையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் விஜய். இதற்காக சேலம் அல்லது தர்மபுரி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் நடத்தி, தேர்தல் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் முடிவு செய்துள்ளார்.
அதேசமயம், த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. கூட்டணி உறுதியானால், கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்க த.வெ.க. தரப்பு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: காத்திருக்கும் அரசியல் சதுரங்கம்!! கச்சிதமாய் காய் நகர்த்தும் விஜய்! தவெகவின் கூட்டணி கணக்கு!
மேலும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு-குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், வர்த்தக சபைகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள்,

மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் சென்று கருத்துகளையும் தேவைகளையும் சேகரிக்க உள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றமும் மாநிலத்தின் முழு வளர்ச்சியுமே எங்கள் நோக்கம். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் விஜய் அளித்த 12 அம்ச முன்னோட்ட வாக்குறுதிகள் இப்போது பெரும் பேசுபொருளாகி வருகின்றன. எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், பொருளாதார மேம்பாடு மூலம் ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் நிலை, வீட்டில் ஒருவர் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு, நிரந்தர வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி சீர்திருத்தம், அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தல், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், மீனவர்கள்-தொழிலாளர்கள்-நெசவாளர்கள்-அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு மேம்பாடு ஆகியவை அந்த 12 அம்சங்களில் இடம்பெற்றிருந்தன.
த.வெ.க.வின் இந்த தீவிர தயாரிப்புகள் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!