சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சி.ஜோசப் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
“சி.ஜோசப் விஜய் எனும் நான்...” என விஜய் உறுதிமொழி ஏற்கத் தொடங்கியதும் அரங்கம் முழுவதும் தொண்டர்களின் ஆர்ப்பரிப்பால் அதிர்ந்தது. “டிவிகே... டிவிகே...” என்ற கோஷமும் விசில் சப்தமும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின.
உணர்ச்சி பொங்க, கண்களில் நீர் ததும்ப முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட விஜயின் காட்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜயின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அவர்களின் முகத்தில் பெருமிதமும் பெரும் மகிழ்ச்சியும் தெரிந்தது.
இதையும் படிங்க: Breaking News! விஜயுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு! அமைந்தது புதிய அமைச்சரவை!!
நீலாங்கரை இல்லத்தில் இருந்து கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை மற்றும் கோட்சூட் அணிந்தபடி பலத்த பாதுகாப்புடன் விஜய் புறப்பட்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு வாழ்த்து தெரிவிக்க, காரில் இருந்தபடியே அவர் கை அசைத்து நன்றி தெரிவித்தார். அரங்கத்திற்கு வந்ததும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநரை மலர்கூடை கொடுத்து வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

விழாவின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’, தேசிய கீதம் ‘ஜன கண மன’ மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ‘நீராரும் கடலுடுத்த’ பாடல்கள் ஒலித்தன. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை 12 முதலமைச்சர்கள் பதவி வகித்த தமிழகத்தில், நபர்கள் அடிப்படையில் புதிய முதலமைச்சராக விஜய் இன்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த விஜய், அரசியலில் நுழைந்து மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று முதல்வர் பதவிக்கு உயர்ந்துள்ளார். இந்தப் பதவியேற்பு விழா தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான தருணமாக அமைந்துள்ளது. புதிய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும், அனைத்துத் தரப்பினரின் ஒற்றுமைக்கும் உறுதியாகச் செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. விஜயின் தலைமையில் புதிய அரசு எத்தகைய சாதனைகளைப் படைக்கும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: Breaking News!! C.ஜோசப் விஜய் எனும் நான்!! ஆண்டவன் மீது ஆணை!! நேரு ஸ்டேடியத்தில் ஒலித்தது தமிழகமே எதிர்பார்த்த குரல்!!