சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தொடங்கிய பின்னர் நடிகர் விஜய் நடித்த கடைசி படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படம், தேர்தல் காரணங்களால் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. சென்சார் வாரியப் பிரச்சினை மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டவிரோத வெளியீட்டால் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் உதவியாளரும் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் இதில் ஈடுபட்டிருந்ததால், விஜய் தரப்பும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் இல்லத்தில் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்கான ஜனநாயகன்! தொண்டர்கள் அதிர்ச்சி! விஜய்க்கு சாதகமா? பாதகமா?

ஆலோசனையில், “தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. கட்சியை நடத்தவும், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும் பெரும் நிதி தேவைப்படும். எனவே, அரசியலுடன் சினிமாவிலும் ஒரே நேரத்தில் ஈடுபடலாம்” என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு-இரு வாரங்களுக்குள் விஜய்யின் அடுத்த படத்துக்கான பூஜை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர்களுடன் இணைந்து மற்றொரு படத்தில் நடிப்பதன் மூலம் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.
தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் விஜய், தனது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு படம் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே இந்தத் திட்டம் உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய்யின் சினிமா திரும்பல் குறித்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையே சமநிலை பேணி செல்ல விஜய் முயற்சி செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: முட்டிக்கு முட்டி தட்டி உள்ள போடுங்க! ஜனநாயகன் லீக்!! பாஜகவுக்கு தொடர்பில்லை - அண்ணாமலை ஆவேசம்!