ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை அருகே இன்று (டிசம்பர் 18, வியாழக்கிழமை) தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. 16 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மைதானத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நிகழ்ச்சி நடக்க உள்ளது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் நேரடியாக கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். விஜயை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காலை முதலே மைதானத்தில் குவிந்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஈரோடு வரைக்கும் வந்தீங்களே!! கரூருக்கு போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!
இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டார். அவர் சட்டை பாக்கெட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடனும், த.வெ.க. கரை வேட்டியுடனும் தென்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த மாதம் த.வெ.க.வில் இணைந்த போது செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை சட்டை பையில் வைத்திருந்தார். அப்போது "இது ஜனநாயக கட்சி. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமானவர்களின் படத்தை வைத்துக்கொள்ளலாம். அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண்டலத்தில் த.வெ.க.வின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் - செங்கோட்டையன் மாஸ் காம்போ! ஈரோட்டில் டிச.,16ல் சுற்றுப்பயணம்! தகர்க்கப்படும் அதிமுக கோட்டை!!