மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் ஓரிடம் கேட்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த ஆறு இடங்களில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும் அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "எங்களிடம் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் சீட் கேட்பது குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்.. எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. குஷியில் மநீமவினர்.!

மேலும் அவர் கூறுகையில், "பாஜக சார்பில் சென்னையில் நடந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். ஜூன் 22ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடக்கும் முருக பக்தர் மாநாட்டிலும் பவன் கல்யாண் கலந்து கொள்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்கும் அவர் வருவார்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் உண்டா.? திமுக கூட்டணி கட்சி சொன்ன நச் பதில்!!